இஸ்லாம்போபியா என்ற சொல்லாட்சி 1980களில் முதன்முறையாக உலக அரங்கில் வழங்கப்பட்டது இது முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக திட்டமிட்டு செய்யப்பட்ட பிரச்சாரத்தினால் இந்த உலகம் சந்தித்த சோதனைகள் ஏராளம்.
பொதுவாக போபியா என்பது பய வியாதியை குறிப்பிடும் சொல் என்பது உங்களுக்கு தெரியும் . இருளைக்கண்டால் பயம் உயரத்தைக்கண்டால் பயம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கண்டால் பயம் வகைகள் பயந்த சுபாவம் கொண்ட மனிதர்களை நாளும் அச்சத்திலும் அல்லலிலும் ஆழ்த்தியது தற்போதும் ஆழ்த்தியும் வருகிறது.
சாதாரண நாயைக்கண்டால், இல்லாத பேயைக் கண்டால் பயப்படும் வியாதியைப்போல் இஸ்லாம் போபியாவை அவ்வளவு சாதாரணமாக எடை போட முடியாது. உலக நாடுகளை குறிப்பாக அமெரிக்கா உள்ளிட்ட ஆதிக்க சக்திகளை அது படுத்தி எடுத்திருக்கிறது. இஸ்லாம்போபியா என்பது மேற்குலகில் வாழும் மக்களிடையே ஒரு மன முதிர்ச்சியற்ற நிலையை ஏற்படுத்தியது.
இஸ்லாத்தை, முஸ்லிம்களை, திருக்குர்ஆனை முஸ்லிம் கலாச்சாரத்தை வேகவேகமாக ஏற்படுத்தி வரும் அதன் தாக்கத்தை மட்டுப்படுத்த சூழ்ச்சி மனம் படைத்த கொடியவர்களால் குறிபார்த்து வீசப்பட்ட தந்திரச்சொல் தான் இஸ்லாம்போபியா இஸ்லாம் என்பது குளிர்ச்சி நிறைந்த எழுச்சி நிறைந்த ஓர் நேர்வழிப்பாதை என்பதை தாங்கிக் கொள்ள முடியாத அந்த பிற்போக்கு சக்திகள் தாக்குதல் தொடுப்பதற்காகவே இந்த சொல்லாடலை பயன்படுத்து வதாக சமூக நல ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர்.
சரி இந்த இஸ்லாம்போபியாவின் விஷமம், வீச்சு எல்லாம் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தின அதன் எதிர்வினைகள் என்ன என்ன என விரிவாக பார்ப்போம்
இந்த பூமிப்பந்து முழுவதும் இஸ்லாம்போபியா பறந்து விஷவாயுவாய் வியாபித்திருந்தது என்றால் வியப்பாக உள்ளதல்லவா ஆனால் அதுதான் உண்மை ஐரோப்பா அமெரிக்கா என மேற்கு மண்டலங்களில் மட்டும் தான் இத்தகைய நிலை என யாரும் கருதிக்கொள்ள கூடாது நம் இந்தியத்திரு நாட்டில் கூட இந்த விஷ வீச்சு பற்றிப்பரவியதை காண முடியும்
இஸ்லாம்போபியா இனி விரிவாக…
இஸ்லாம்போபியா என்ற சூழ்ச்சிசொல், பொதுவாக 1980 களில் பயன்படுத்தப்பட்டதாக சொல்லப்பட்டாலும் அது பிரபலப்படுத்தப்பட்டது 2001 செப்டம்பர் 11 க்கு பிறகுதான் . மேற்கு ஐரோப்பாவில் முஸ்லிம் மக்கள் அதிக அளவு குடியேறத் தொடங்கியதில் இருந்து மேற்கு ஐரோப்பிய நாடுகளில் அதிக அளவு பயன்படுத்தப்பட்டது.ஈரோப்பியன் மானிட்டரிங் சென்டர்அன் ரேசிசம்அண்ட் இஸ்லாம் போபியா என்ற அமைப்பு குறிப்பிட்டுள்ளது பொதுவாக கலாச்சார ரீதியாக சமய அடிப்படையில் இன ஒடுக்கல் முறையிலும் முஸ்லிம்களுக்கு எதிராக பல்வேறு தாக்குதல் நிகழ்ந்தன, எல்லாம் இஸ்லாம் போபியாவின் பெயராலே.
போஸ்னியா இனப்படுகொலைகள்
தொன்னூறுகளில் நடைபெற்ற போஸ்னிய இனப்படுகொலைகளை இந்த பூமியால் மறக்க முடியுமா? இரண்டு லட்சம் முஸ்லிம்கள் துள்ளத்துடிக்க கருவறுக்கப்பட்டனர். இதில் 12 ஆயிரம் பேர் ஒரு பாவமும் அறியாத சினஞ்சிறு சிசுக்கள் ஆவர். 50 ஆயிரம் முஸ்லிம் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு இலக்காக்கப்பட்டு கசக்கி நுகரப்பட்டு காராக்கிரகத்தில் தள்ளப்பட்டனர். 22 லட்சம் மக்கள் வலுக்கட்டாயமாக சொந்த நாட்டில் இருந்து விரட்டியடிக்கப்பட்டனர். முஸ்லிம்களின் ஆற்றாமை துயரமாக சர்வதேச அளவில் வர்ணிக்கப்படுவது போஸ்னிய இனப்படுகொலைகள் எனில் அது மிகையன்று.
கனடா
சுதந்திரம் சமத்துவம் போன்றவை தங்களது அடிப்படை கொள்கைகள் என்று பெரிய அளவில் பிரச்சாரம் செய்வது அமெரிக்க கண்டத்தில் இருக்கும் கனடா என்ற அழகிய நாட்டின் முழக்கமாகும் அதனாலே கனடா நாட்டில் இந்திய ஒற்றுமையை எதிர்க்கும் சீக்கிய தீவிர அமைப்பாக கருதப்பட்ட காலிஸ்தானுக்கு கூட ஆதரவு தளம் அமைத்து கொடுத்தது. .
இலங்கையில் செயல்பட்ட விடுதலைப் புலிகளின் கருத்தியல் முகாம்கள் ஒரு காலத்தில் கனடாவில் இருந்தது உண்டு. ஆனால் அந்த நாட்டு மக்களின் மனதில் கூட இஸ்லாம்போபியா நீக்கமற நிறைந்திருந்தது. ஒன்டாரியோவில் உள்ள ஹாமில்டன்சிட்டி பகுதியில் ஹிஜாப் அணிந்த ஒரே காரணத்துக்காக முஸ்லிம் பெண்மணி தாக்கப்பட்டார். இதனை அமெரிக்காவில் செயல்படும் முன்னணி சமூக நல அமைப்பான கேர் இன் பிரமுகர் ஹலீமா முபர் தெரிவித்தார். இது நடந்தது இவ்வாண்டு ஜனவரி நான்காம் தேதியில். அது மட்டுமல்ல கனடாவில் மிகப்பெரிய பள்ளிவாசல் ஸ்டோன்சர்ச் சாலையில் உள்ளது. அது பெட்ரோல் குண்டுகளால் தாக்கப்பட்டது.
டென்மார்க்
நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களை கொச்சைப்படுத்தும் விதமாக கார்ட்டூன் சித்திரம் வரைந்த விவகாரத்தில் ஐரோப்பா மட்டும் அல்ல உலகமே அல்லோலகல்லோளப்பட்டது. 2006 ஆம் ஆண்டு மார்ச் 7 ஆம் தேதி நடந்த அந்த விரும்பத்தகாத சம்பவத்தில் இஸ்லாமிய உலகம் கொந்தளித்த போது மேற்குலகம் டென்மார்க் தரப்புக்கு பக்க பலமாக நின்றது .
இருப்பினும் பெருமானார் அவர்கள் மீது முஸ்லிம்கள் தங்களது அப்பழுக்கில்லாத அன்பை வெளிப்படுத்த வேண்டிய விஷயமாயிற்றே விடுவார்களா? இடை விடா போராட்டம் உலகம் எங்கும் நடைபெற்றது.
முஸ்லிம் நாடுகள் பல டென்மார்க் பொருட்களை புறக்கணித்தன. பால் பொருட்களுக்கு பேர்போன டென்மார்க்கின் பால் பொருட்கள் அனைத்தும் பாழாயின. டென்மார்க் பிரதமர் ரச்முஷ்ஷன் பகிரங்க மன்னிப்பு கேட்டார் .
உலக கத்தோலிக்க தலைவர் போப் 16 ஆம் பெனடிக்ட் தனது கண்டனத்தையும் வருத்தத்தையும் பதிவு செய்தார். பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ் கார்ட்டூன் விவகாரம் தேவையற்ற விபரீதம் என முழங்கினார். எனினும் கார்ட்டூன் விவகாரத்தில் மேற்கு ஊடகங்களின் கண்மூடித்தனமான ஆதரவு தொடர்ந்தது.
வெறுப்புணர்வு என்ற காட்டு நெருப்பை நெய்யூற்றி வளர்ப்பதே ஊடகங்கள் தான் என்ற திட்டவட்டமான முடிவு சமூக நல ஆர்வலர்கள் அனைவரின் உள்ளங்களிலும் எதிரொலித்தது. அரசுகளின் தலைவர்கள் கண்டிக்கிறார்கள் சமய உயர் பீடங்களில் உள்ள தலைவர்கள் கூட மனம் வெறுத்து கண்டிக்கிறார்கள். இருப்பினும் இஸ்லாம் போபியாவுக்கு மேற்கு உலகில் கண்மூடித்தனமான ஆதரவு நிலைபெற்று விட்டது எனில் இது ஊடக உலகின் மிகப்பெரிய விஷமப்பிரச்சாரத்தின் விளைவு என்பதை அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டியதாயிற்று.
ஜைலாண்ட்ஸ் போஸ்ட் என்ற ஊர்பேர் தெரியாத அந்தபத்திரிகைக்கு உலக பிரபலத்தை தேடித்தந்து உதவின மேற்கு ஊடகங்களின் இஸ்லாம்போபியா என்றால் அது சரியானதல்ல என எவராலும் சொல்ல முடியாது
பிரான்ஸ்
ஐரோப்பாவில் முஸ்லிம் மக்கள் அதிகம் வாழும் நாடான பிரான்சில் இஸ்லாம்போபியா எந்த அளவு ஆழமாய் வேரூன்றியுள்ளது என்பதை ஆராய வேண்டுமெனில் இந்த கட்டுரைத் தொடர் அனைத்தையும் பிரான்சுக்கே தாரை வார்த்துக் கொடுக்க வேண்டியது தான்.
2004 ஆம் ஆண்டு முஸ்லிம் பெண்கள் தலையில் அணியும் முக்காடுக்கு தடை விதிக்கப்பட்டது இதனால் முஸ்லிம் பெண்கள் பள்ளி கல்விக்கு நிரந்தர முட்டுக்கட்டை போடும் சதி திட்டம் அரங்கேற்றப்பட்டது. இத னால் ஏராளமான முஸ்லிம் சிறுமிகள் பள்ளி படிப்பை நிறுத்திவிட வேண்டியதாயிற்று.. சிலர் வீட்டிலேயே படிக்க ஆரம்பித்தனர். சிலர் தங்களது பூர்வீக நாடுகளுக்கு பாட்டனார் பாட்டிகளுடன் மூட்டை கட்டி அனுப்பி வைக்கப்பட்டனர்.
அதே வேளையில் ஏராளமான முஸ்லிம் கல்வி நிலையங்களும் தொடங்கப்பட்டன. இது பிரெஞ்சு முஸ்லிம்களின் மத்தியில் ஓரளவு எழுச்சியை ஏற்படுத்திய போதிலும் இஸ்லாம்போபியா தொற்று நோயை இது இரு கை நீட்டி வரவேற்றது. சில முஸ்லிம் மகளிர் தலை முடியை குறைத்து கிராப் வைத்து பள்ளிகளுக்கு சென்றனர். பொதுவாக முஸ்லிம் மகளிரின் வேலைவாய்ப்பு திட்டமிட்டு முடக்கப்பட்டது.
பிரான்ஸ் முஸ்லிம் மகளிர் அங்கு வாழும் கிறிஸ்தவ மகளிரை விட இரண்டரை சதவீதம் வேலைவாய்ப்பில் பின்தங்கியதாக பிரத்தியேக கருத்துக்கணிப்பு குறிப்பிட்டது.
பள்ளிவாசல்களில் பன்றித் தலைகளை வீசுவதும் முஸ்லிம்களின் கபர்ஸ்தான்களை சேதப்படுத்துவதும் என பிரஞ்சு மக்களும் தங்கள் பங்குக்கு இஸ்லாம்போபியா வியாதியை பரப்பினர். ஒரே ஆண்டில் 148 கபர்ஸ்தான்கள் சேதப்படுத்தப்பட்டன. தலைநகர் பாரிசில் உள்ள பள்ளிவாசல்களும் கூட தாக்குதல்களுக்கு தப்பவில்லை
இதற்கு சமூகவியலாளர்கள் பல்வேறு காரணங்களை கூறுகிறார்கள் பிரான்சில் முஸ்லிம்களின் மக்கள் தொகை மானாவாரியாக எகிறி வருவதால் பெருகிவரும் முஸ்லிம்களுக்கு செய்ய வேண்டிய வேலைவாய்ப்பு வாழ்விடம் மற்றும் சமூக பொருளாதார காரணங்களுக்காக அவர்களை ஒரேயடியாக ஒடுக்கிவிட்டால் இத்தகைய ஜீவாதார பிரச்சனைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளவே இந்த கெடுபிடி என குறிப்பிடுவதையும் புறம் தள்ள முடியவில்லை.
இதனிடையே பிரான்சு நாட்டு நாடாளுமன்ற மேல்சபையை தடைச்செய்யக் கோரும் மசோதாவை நிறைவேற்றியது. இம்மசோதாவிற்கு ஆதரவாக 249 வாக்குகளும் எதிராக ஒரு வாக்கும் கிடைத்தன. இதன் மூலம் பிரான்சில் இனி பொது இடங்களில் முஸ்லிம் பெண்கள் பர்தா அணியத் தடை நடைமுறைக்கு வரும்.
ஐரோப்பாவில் அதிகமாக முஸ்லிம்கள் வாழும் நாடுகளில் பிரான்சு முதலிடத்தை பெறுகிறது.. இங்கு முஸ்லிம்கள் இரண்டாவது பெரிய மதப்பிரிவினர் ஆவர். மத சுதந்திரம் என்னும் பெயரில் இம்மசோதாவிற்கு எதிரான வாதங்களை எதிர்கொள்ளும் விதமாக மிக ராஜ தந்திர முறையில் இம்மசோதாவில் சில பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன.
மசோதாவின் ஏழு பிரிவுகளில் ஒரு இடத்தில் கூட முஸ்லிம், பர்தா, பெண் என்ற வார்த்தை பயன்படுத் தப்படவில்லை. கடந்த ஜூலையில் பிரான்சு நாடாளுமன்றத்தின் தேசிய அவை இம்மசோதாவிற்கு அங்கீகாரம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சமய ரீதியாக முகத்தை மறைப்பது பிரான்சு காத்துவரும் மதசார்பற்றத் தன்மைக்கும், பெண் சுதந்திரத்திற்கும் எதிரானது என சுட்டிக்காட்டித்தான் பிரான்சு அரசு பர்தா அணிய தடை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே பிரான்சு அரசின் நடவடிக்கைக்கு எதிராக பல இடங்களிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு அரசு விரும்பினால் இதர நாடுகளில் முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவதுபோல் அந்த சுதந்திரத்தை அனுமதிக்கவேண்டும் என உலக அளவில் கண்டன குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.
- அபூஸாலிஹ்

1 Trackback or Pingback
[...] சென்ற இதழின் தொடர்ச்சி… [...]